நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று : பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்..குவிந்த பக்தர்கள்
முருகனின் 3வது படைவீடான பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வெகுவிமரிசையாக நடைபெறும் குட முழுக்கு விழாவுக்காக ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
பழனி முருகன் குடமுழுக்கு
காலை 8 மணிக்கு மேல் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்படவுள்ளது. அப்போது, ஹெலிக்காப்டர்கள் மூலம் கோபுரங்களுக்கும் பக்தர்களுக்கும் மலர் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக நீரை பக்தர்கள் மீது தெளிக்க 8 இடங்களில் கருவிகளும் செய்யப்படுள்ளன பழனி கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.
உள்ளூர் விடுமுறை
மேலும் பழனி கும்பாபிஷேக விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர். முன்னதாக நேற்று முன்தினம் படிப்பாதை, கிரிவல வீதியில் உள்ள கடம்பன், இடும்பன், மயில்கள், அகஸ்தியர் உள்ளிட்ட கோயில்களில் நன்னீராட்டு விழா நடந்தது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் காலை 11 மணி முதல் வழக்கம்போல பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.