களைகட்டும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - பரிசுப்பொருட்கள் என்னென்ன?
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு
பொங்கல் சமயத்தில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். இதில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை.
பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இன்று(16.01.20250 உலகப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
உதயநிதி ஸ்டாலின்
இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் பங்கேற்றுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்.
சிகிச்சை அளிக்க 200 மருத்துவர்கள், 60 கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பரிசு பொருட்கள்
இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும், காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்கம் வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதில் நடிகர் சூரியின் காளை 'பரூஸ்லி' மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் யாரிடமும் பிடிபடாமல் பரிசு பெற்றுள்ளது. மேலும், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் 2 காளைகளும் பரிசு பெற்றுள்ளது.
இதில் மாடுபிடி வீரராக கலந்துகொள்ள, சென்னையில் வசித்து வரும் அயர்லாந்தை சேர்ந்த ஆண்டனி கண்லேன் என்பவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண 40 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் கண்லேனுக்கு 53 வயதாவதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.