தமிழகத்தை உலுக்கிய என்கவுண்டர்: யார் இந்த வெள்ளை காளி?
தமிழகத்தில் பொலிசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற பெரம்பலூர் ரவுடி அழகுராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் பொலிசார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து சென்ற போது, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் திருமாந்துறை டோல்கேட் அருகே வண்டியை நிறுத்தி ஹொட்டலில் உணவருந்தினர்.

ஹொட்டலுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்த போதும், இரு கார்களில் வந்த மர்ம கும்பல் உணவகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
தொடர்ந்து அரிவாளால் வெள்ளை காளியை வெட்டவும் முயற்சி செய்தனர், உடனே எஸ்ஐ ராமச்சந்திரன் துப்பாக்கி சூடு நடத்த அவர்கள் தப்பிச்சென்றனர்.
இதனைதொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, ஒரத்தூர் சுங்க சாவடியில் நிற்காமல் சென்றதும், கடலூர் மாவட்டத்தில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் குற்றவாளிகளை பொலிசார் தேடி வந்த நிலையில் அழகுராஜா என்பவரை கைது செய்தனர், காட்டுப்பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக அழகுராஜா கூற அதை மீட்பதற்காக பொலிசார் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது எஸ்ஐ சங்கரை தாக்கிவிட்டு அழகுராஜா தப்பிக்க முயல, மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா உயிரிழந்தார்.