பாஜக வில் இணைகிறாரா மு.க.அழகிரி ? - முக்கிய தலைவர் வெளியிட்ட தகவல்
மு.க.அழகிரி பாஜகவில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக சார்பில் நடைபெறும் மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தாமரை மலரப்போகும் நாள் உருவாக போகிறது என்றும், அந்த நாள் வரப்போகிறது என்பதற்கு தான் வி.பி.துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் வந்து பறைசாற்றுகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் விரைவில் மதுரையில் இருந்து மு.க.அழகிரியும் பாஜகவில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம்.
இன்று 4 இடங்களை பெற்றுள்ள நாம் 140 இடங்கள் பெறும் வரை அயராது உழைக்க வேண்டும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன் மு.க.அழகிரி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதற்கு அழகிரி முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.