தயாநிதியைக் கட்டியணைத்து வரவேற்றார் உதயநிதி ஸ்டாலின்
முக ஸ்டாலினின் முதல்வர் பதவியேற்பு விழாவில் வருகை தந்த தயாநிதி அழகிரியை கட்டியணைத்து வரவேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில், திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் தயாநிதி அழகிரியை கட்டி அணைத்து வரவேற்றார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று மு.க.அழகிரி, "முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தம்பி ஸ்டாலினைப் பார்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று வாழ்த்தியிருந்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.