அட்சய திருதி: நகைக் கடைகளில் முண்டியடிக்கும் மக்கள் - தங்கம் விலை எவ்வளவுனு பாருங்க
அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
அட்சய திருதியை
இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30 இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஏதேனும் பொருள் வாங்கினால், அது பெருகும் என நம்பப்படுகிறது. பலர் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அட்சய திருதியை திதி நேற்று இரவு 8.40 மணிக்குத் தொடங்கி, இன்று மாலை வரை நீடிக்கிறது. அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்க உகந்த நேரம் காலை 05:41 மணி முதல் பிற்பகல் 02:12 மணி வரை ஆகும். அதிகாலையிலேயே சென்னையில் உள்ள பல நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
தங்கம் விலை
சில கடைகளில் சவரனுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பல கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.71,840க்கும், கிராம் ரூபாய் 8,980க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல, வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.