சட்டசபை தேர்தலில் போட்டியில்லை - அகிலேஷ் யாதவ் அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அகிலேஷ் யாதவ் அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. 430 தொகுதிகளை கொண்ட அங்கு ஆட்சியை பிடிப்பதற்கு பல முனை போட்டி நிலவிவருகிறது. ஆளும் பாஜக கூட்டணி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி போன்றவை தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றன.
இதனிடையே முன்னாள் ஆளுங்கட்சியான சமாஜ்வாதி கட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊடகத்துக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், RLD உடனான எங்கள் கூட்டணி இறுதியானது. தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரான அகிலேஷ் யாதவ் தற்போது, அசம்கார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். முதலமைச்சர் வேட்பாளராக பார்க்கப்படும் அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது சமாஜ்வாதி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இந்தமுறை பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.