Akhilesh Yadav History in Tamil; இளம் வயதிலேயே முதலமைச்சர் பதவி - சட்ட ஒழுங்கில் திண்டாடிய அகிலேஷ் யாதவ்!
அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவர் ஆவார்.
பிறப்பு, படிப்பு
உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைஃபாயில் அகிலேஷ் யாதவ் பிறந்தார். இவரது பெற்றோர் மால்தி தேவி மற்றும் முலாயம் சிங் யாதவ். JSS அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் சுற்றுச்சூழல் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரான டிம்பிள் யாதவை மணந்தார். இவர்களுக்கு அதிதி மற்றும் டினா என இரண்டு மகள்களும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். கால்பந்து மற்றும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2000 ஆம் ஆண்டில் கன்னோஜ் தொகுதியில் இருந்து 13வது மக்களவைக்கு இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே அரசியலில் அவரது முதல் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
ஆரம்ப கால அரசியல்
உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் பொது விநியோக குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். 2000 முதல் 2001 வரை நெறிமுறைகள் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார் 2004 இல் இரண்டாவது முறையாக 14வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நகர்ப்புற வளர்ச்சிக்கான குழு, பல்வேறு துறைகளுக்கான கணினிகளை வழங்குவதற்கான குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான குழு, மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் மீதான குழு உள்ளிட்டவற்றில் உறுப்பினராகவும் விளங்கினார்.
தொடர்ந்து, 2009-2012 வரை யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக 15வது மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். இந்த சமயத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் மீதான குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான குழு மற்றும் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் JPC குழுக்களில் உறுப்பினரானார். மேலும், தேர்தல்களில் இவரது பரப்புரை தனித்தன்மையுடையதாக இருந்தது.
கட்சியின் தலைவர்
ஈராழி மிதிவண்டியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் தனது குழுவில் தகவல்தொடர்பு தொழில்முறை வல்லுனரையும் வானொலித் தொகுப்பாளரையும் கொண்டிருந்ததும் இவரது ஆளுமையும் சமாஜ்வாடி கட்சி சட்டப்பேரவையின் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடிக்கக் காரணமாக அமைந்தது.
2012ல், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 38வது வயதில் சட்டமன்றத் தேர்தலில் 224 இடங்களை வென்று, உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார். அந்த பதவியை வகித்த இளைய நபர் இவரே ஆவார். யாதவ் தனது கட்சி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மேலும் பணியாற்றுவதற்காக கன்னோஜ் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து ராஜினாமா செய்தார்.
முதலமைச்சர்
உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினரானார். 2016ல் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் இவரின் தந்தையுமான முலாயம் சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கினார். இதன் எதிரொலியாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் பதவியை தானே எடுத்துக்கொண்டதாக மாநாடு நடத்தி அறிவித்து, முலாயம் சிங் இனிமேல் கட்சி ஆலோசகராக இருப்பர் என்று தெரிவித்தார்.
2017 சட்டமன்றத் தேர்தலில், யாதவ் தலைமையிலான SP - காங்கிரஸ் கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. எனவே தனது ராஜினாமா கடிதத்தை அப்போதைய ஆளுநர் ராம் நாயக்கிடம் அளித்தார். 2019 இந்தியப் பொதுத் தேர்தல்கள் மற்றும் 2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் யாதவ் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் பணிகள்
பின்னர் தனது மாநில சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். அதன் மூலம் மக்களவையில் ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலத்தில், ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை போடப்பட்டது. இந்தியாவின் மிக நவீன மற்றும் நீளமான விரைவுச்சாலை இதுவே. மேலும், மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட பெருமையும் சேரும்.
மின் துறையை மேம்படுத்துதல், காவல் துறையை நவீனப்படுத்துதல், கிசான் பஜார் மற்றும் மண்டிகள் அமைத்தல், லோஹியா ஆவாஸ் யோஜனா, கன்யா வித்யா தன், கிசான் அவம் சர்வித் பீமா யோஜனா, ஓய்வூதிய யோஜனா, வேலையின்மை உதவித் தொகைகள் போன்ற சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2012-2015 க்கு இடையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டன.
விமர்சனங்கள்
இதற்கிடையில், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மூத்த காவலர்களுக்குப் பணிவிடை செய்ததாக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. காவல்துறையினரை தாக்கி கொலை செய்த சம்பவங்கள், முசாபர்நகர், மதுரா, பரேலி மற்றும் பைசாபாத் போன்ற இடங்கள் உட்பட ஏராளமான வகுப்புவாத வன்முறை மற்றும் கலவர வழக்குகள், ஜவஹர் பாக் எபிசோட் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பேன்ற பல வழக்குகள் இதில் அடங்கும்.
தற்போது, 17வது மக்களவையில் ஆசம்கர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு
2022 முதல் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.