அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அதிக ஏலம் போகும் வீரர் இவர் தான் - முன்னாள் வீரர் கணிப்பு
இந்திய டி20 அணியின் துணைகேப்டன் கே.எல்.ராகுலின் ஆட்டத்தை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா புகழ்ந்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 3வது டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இதனிடையே 2வது போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த கே.எல் ராகுல் 49 பந்துகளில் 70 ரன்களும், ரோஹித் சர்மா 36 பந்துகளில் 55 ரன்களும் குவித்தனர். இதனால் இந்திய அணியின் வெற்றி எளிதானது. இதனையடுத்து அணியின் வெற்றிக்கு காரணமான கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.
அந்த வகையில் கே.எல் ராகுல் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் நிச்சயம் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் போவார் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அணியும் கே.எல் ராகுலை தங்களது அணியில் எடுக்க முயற்சிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.