அஜித் குமார் இறந்ததை நினைச்சு நானும், அம்மாவும் தினமும் அழுவுறோம் - ஆடியோ வெளியிட்ட நிகிதா
அஜித் குமார் இறந்ததை நினைத்து நானும், என் தாயும் தினமும் அழுவதாக நிகிதா ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அஜித் குமார் மரணம்
சிவகங்கை, திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 5 காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நிகிதா தற்போது புதிய ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “இந்த விவகாரத்தில் நான் வந்து அமைதியாக இருக்கிறேன் என்றால் தம்பி அஜித் குமார் மரணம் கண்டிப்பா ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வேதனை. அவங்க தாய் அழுதாங்களோ இல்லையோ..
நிகிதா ஆடியோ
நானும் என் தாயும் தினம் அழுதுகொண்டு இருக்கிறோம். சம்பவதன்று நான் ஸ்டேஷன் போய் அறநிலைத்துறை அதிகாரிகளோடு புகார் அளித்துவிட்டு வந்துவிட்டேன். வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் நாள் முழுவதும் எங்களோடு தான் இருந்தார். அதன்பிறகு நடந்த நிகழ்வுகள் எதுவுமே எனக்கு தெரியாது. என்ன நடந்தது என்று கூட தெரியாது.
எந்த ஒரு உயர் அதிகாரியும் எனக்கு தெரியாது. முதல்வர் ஸ்டாலினுடன் சேர்த்து வைத்து பேசுகிறார்கள். முதலமைச்சர் மீது எனக்கு மரியாதை தான் உள்ளது. வேறு தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பும் கிடையாது. முதல்வரே அஜித் குமாரின் தாயிடம் மன்னிப்பு கேட்கிறார் என்றால் நான் அஜித் குமாரின் தாயிடம் பல முறை மன்னிப்பு கேட்கவேண்டும்.
என்னை கேமராக்கள் தன்னை சூழ்ந்து கொண்டு இருப்பதால் வெளியே வர முடியவில்லை. நான் உயிர்களை மிகவும் நேசிப்பவள். எந்த உயிருக்கும் பாதிப்பு வரக்கூடாது என நினைப்பேன். குக்கர் மூடியில் ஒரு எறும்பு ஒட்டி இருந்தால் கூட அதை மெதுவாக தள்ளி விட்டு விட்டுத்தான் நான் சாதம் வைப்பேன். வாழ்வது எல்லா உயிர்களின் உரிமை. அழிப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது. எனக்கு ஐஏஎஸ் அதிகாரியை தெரியும்.
அவருக்கு போன் செய்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அஜித் குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என உண்மையாகவே அக்கறை இருந்தால் இப்படி திசை திருப்பும் வகையில் செய்தி ஊடகங்கள் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை மீது சேற்றை வாரியிறைப்பது இந்த சமூகத்துக்கு தேவை இல்லாத விஷயம்.
நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது அப்பா ஒரு நேர்மையான அரசு அதிகாரி. ஒவ்வொரு ஆண்டும் கலெக்டரிடம் பாராட்டு பெற்றவர். இதை உலகமே எதிர்த்தாலும் நான் தெரிவிப்பேன். என் அப்பா உயர் பதவியில் இருந்தாலும், லோன் வாங்கி நாங்கள் வீடு கட்டினோம். நாங்கள் எந்த சூழ்நிலையிலும் சட்டத்தின் வழியே நடக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.