ராஜமௌலி படத்திற்கு அஜித் ரசிகர்கள் கடும் எச்சரிக்கை - வைரலாகும் போஸ்டர்
இயக்குநர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அஜித்குமார் - இயக்குநர் எச்.வினோத் - தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் மீண்டும் வலிமை படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
வலிமை படத்தின் போஸ்டர், மோஷன் போஸ்டர், 2 பாடல்கள் ஆகியவை இதுவரை வெளிவந்துள்ளன. டீசர் வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததாக ட்ரெய்லர் மட்டுமே வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குனர் எச்.வினோத் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். இதனால் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே வலிமை படத்திற்கு போட்டியாக பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கியிருக்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகும் என்றும், இப்படம் ஒருவாரம் முன்பாக ஜனவரி 7 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 450 கோடி ரூபாய் செலவில் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகுவதால் அஜித் ரசிகர்கள் சிலர் கொந்தளிப்பில் உள்ளனர். போஸ்டர்களுக்கு பெயர் போன மதுரை ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்கள்.
அந்த போஸ்டரில், ஆர்.ஆர்.ஆர். உங்கள் ஆட்டம் இப்போது முடியப் போகிறது என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.