“ரொம்ப நம்புனோமே... இப்படி ஏமாத்திட்டீங்களே” - நடிகர் அஜித்தால் புலம்பும் ரசிகர்கள்
வலிமை திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் கோவையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இதன் காரணமாக வலிமை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலைமை சீரானது திரையரங்குகளில் வெளியிடுவோம் என படக்குழு தெரிவித்தது. வலிமை படத்துக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, படக்குழுவின் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் கோவையை சேர்ந்த அஜித் ரசிகர்கள், போஸ்டர் ஒட்டி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதில் "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" குறிப்பிடப்பட்டு உள்ளது. கோவையை சேர்ந்த அடங்காத அஜித் குரூப்ஸ் என்கிற குழுவினர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.