தூய்மை பணியாளர்களை கௌரவித்து அஜித் ரசிகர்கள் உதவி
மயிலாடுதுறையில் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அஜித் ரசிகர்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஒருவாரத்துக்கு தேவையான அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களையும் வழங்கினர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 24ஆம் தேதி முதல் வருகின்ற 31 ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் உளுத்துக்குப்பை ஊராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களின் பணியை பாராட்டி அஜித் ரசிகர்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, மளிகை மற்றும் காய்கறி பொருட்களை வழங்கினார். அதேபோல் ஊராட்சி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார்.