9 முறை வென்ற மண்ணிலேயே உயிரிழந்த அஜீத் பவார்! பிரதமர் மோடி இரங்கல்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத் பவார், 9 முறை போட்டியிட்டு வென்ற பாராமதி தொகுதியிலேயே விபத்தில் சிக்கி அஜித் பவார் உயிரிழந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியதில் அஜித் பவார் உட்பட ஆறு பேரும் உயிரிழந்தனர். குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அஜித் பவார், 2010 முதல் 2014 வரையிலும், 2019 முதல் தற்போது வரையிலும் அம்மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
அஜித் பவார் முதல் முறையாக 1991இல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதே ஆண்டு மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பின்னர் 1995, 1999, 2004, 2009, 2014, 2019 மற்றும் 2024 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.1991, 1995 தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார்.
இந்நிலையில், தனது சொந்தத் தொகுதியான பாராமதிக்கு தனி விமானம் மூலம் இன்று காலை அஜித் பவார் புறப்பட்டார்.
எதிர்பாராத விதமாக விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் (2 விமானிகள், ஒரு பாதுகாப்பு அதிகாரி, ஒரு உதவியாளர்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதி செய்துள்ளது.
மும்பையிலிருந்து தனது கோட்டைக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றபோதுதான் இந்தத் துயரம் நிகழ்ந்தது.

பிரதமர் மோடி இரங்கல்
இந்த நிலையில், அஜீத் பவாருடன் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பதிவில் தெரிவித்திருப்பதாவது: அஜீத் பவார் மக்களுடன் வலுவான பிணைப்பையும், அடித்தட்டு மக்களுடன் ஆழமான தொடர்பையும் கொண்டிருந்த மக்கள் தலைவர்.
மகாராஷ்டிர மக்களுக்குச் சேவையாற்ற எப்போதும் முன்களத்தில் இருந்த ஒரு கடின உழைப்பாளி என்ற வகையில் அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
நிர்வாக ரீதியில் அவரது ஆழ்ந்த அறிவும், ஏழை மற்றும் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கான அவரது ஆர்வமும் குறிப்பிடத்தக்கது. அவரது அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.