இனி அவருக்கு வாய்ப்பு கிடைப்பதே ரொம்ப கஷ்டம்; முன்னாள் வீரர்
தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரஹானேவிற்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
கடந்த கால மோசமான வரலாறுகளை மாற்றி இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருப்பதை போன்று, முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே போல் இரு அணிகள் இடையேயான இந்த தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளையும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள் குறித்தும், எதிர்வரும் தென் ஆப்ரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர்,
தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரஹானேவிற்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரஹானேவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதே கஷ்டம் என்றே கருதுகிறேன்.
ஸ்ரேயஸ் ஐயர் மிக சிறப்பாக விளையாடிவிட்டதாலும், ரஹானே தொடர்ந்து சொதப்பி வருவதாலும் ரஹானேவை விட ஸ்ரேயஸ் ஐயருக்கே இந்திய அணி முன்னுரிமை கொடுக்கும் என கருதுகிறேன்.
அதே போல் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரியும் குறை சொல்ல முடியாத அளவிற்கு விளையாடி வருகிறார், எனவே ரஹானேவிற்கு இடம் கிடைப்பது நடக்காத காரியம் தான்” என்று தெரிவித்துள்ளார்.