உலக சாதனை படைத்த வீரருக்கே இதுதான் நிலைமையா? - கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் உலக சாதனை படைத்த அஜாஸ் பட்டேல் நியூசிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் மும்பையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஜிம் லேக்கர், கும்ப்ளேவிற்கு பிறகு ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை அஜாஸ் பட்டேல் படைத்தார். இதற்கு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அஸ்வின் தனது ஜெர்சியில் இந்திய வீரர்களின் கையெழுத்தை இட்டு அதனை பரிசாக அஜாஸ் பட்டேலுக்கு வழங்கினார். மேலும், டிவிட்டரில் அஜாஸ் பட்டேலுக்கு நீல நிற டிக் அஸ்வின் வாங்கி தந்தார்.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் சேர்க்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், நியூசிலாந்து அணியும் நிறவெறியுடன் அஜாஸ் பட்டேலை நீக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பயிற்சியாளர் கேரி ஸ்டேத், சூழலுக்கு தகுந்த வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தார்.உலக சாதனை படைத்தும் அணியில் இடம் கிடைக்காத அஜாஸ் பட்டேலுக்காக தாம் வருந்துவதாகவும் கூறினார். .