டெல்லி முதல்வர் வீடு கட்டுமான செலவு ரூ.171 கோடி - அதிர்ச்சி கொடுக்கும் காங்கிரஸ் தலைவர்..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கணக்கில் காட்டாத அவரது வீடு கட்டுமான செலவு பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் புகாரளித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்
டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தனது அரசு பங்களாவை புதுப்பித்தார். அதற்கான செலவு மொத்தம் ரூ.45 கோடி என்று அரசிடம் கணக்கு காட்டியுள்ளார். இது குறித்து தற்போது காங்கிரஸின் மூத்த தலைவரான அஜய் மக்கான் புகாரளித்துள்ளார்.

அதில் அவர், "டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசு பங்களா ரூ.45 கோடியில் புதுப்பிக்கப்படவில்லை. அதைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாக ரூ.171 கோடி செலவில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான பட்ஜெட்டை டெல்லி அரசு நிறைவேற்றியபோது கேஜ்ரிவாலின் பங்களாவை புதுப்பிப்பதற்குத்தான் இந்த தொகை செலவிடப்பட உள்ளது என்பதை எந்த இடத்திலும் வெளிப்படையாக அவர் தெரிவிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
அரசு கருவூல பணம்
தொடர்ந்து அவர், "கேஜ்ரிவாலின் பங்களாவை சுற்றிலும் 22 அதிகாரிகள் வசிக்கும் வீடுகள் இருந்தன. சீரமைப்பு பணிகள் தொடங்கியதில் அந்த வீடுகள் காலி செய்யப்பட்டு கேஜ்ரிவாலின் பங்களா விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அந்த 22 அதிகாரிகளும் தங்குவதற்கு காமன்வெல்த் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை டெல்லி அரசு வாங்கியுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பின் விலையும் ரூ.6 கோடி ஆகும். இந்த பணம் மாநில அரசின் கருவூலத்திலிருந்து செலவழிக்கப்பட்டுள்ளது" என்று கூறி டெல்லி முதல்வர் மீது புகார் அளித்துள்ளார்.