லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. மத்திய அமைச்சரின் மகன் அதிரடி கைது

Lakhimpur Kheri Minister Ajay Mishra farmersprotest
By Petchi Avudaiappan Oct 09, 2021 10:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அங்கு காரில் வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் பெரும் மோதல் மூண்டது.

இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகளை கொலை செய்ததாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

கடும் எதிர்ப்புகள் வந்ததால் ஆஷிஷ் மிஸ்ரா மீது உத்தர பிரதேச அரசு கொலை வழக்கு பதிவு செய்தது. இதனிடையே நேற்று காலை 10.30 மணிக்கு போலீசில் சரண் அடைவதாக கூறி இருந்த ஆஷிஷ் மிஸ்ரா தலைமறைவானார்.

அவர் நேபாளத்தில் பதுங்கி இருக்கிறார் என்றும் போலீசார் அவரை தேடி வருவதாகவும் தகவல்கள் கூறின. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட குற்றவாளிகள் ஏன் கைது செய்யப்படவில்லை. ஏன் இந்த தாமதம்? என்று உச்சநீதிமன்றம் உத்தரபிரதச அரசுக்கு கேள்வி எழுப்பியது.

இதனை தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை உத்தரபிரதேச போலீசார் இன்று இரவு கைது செய்தனர். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அஜய் மிஸ்ராவை கைது செய்ததாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா 5 நாட்களுக்குப் பிறகு கைது செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.