தனுஷூடன் மீண்டும் காதலில் விழுந்த ஐஸ்வர்யா? - இரண்டாம் வாய்ப்பு கொடுப்பேன் என பேட்டி
காதலுக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்க விரும்புவதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.
இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இருவரும் திரையுலக பணிகளில் பிசியாக உள்ளனர்.
இயக்குநர் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் காதல் பாடல் ஒன்று தயாராகி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் தனுஷ் மாறன், வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் சவால் நிறைந்த சூழலை சமாளிக்க வேண்டும் என நினைப்பதாகவும், எந்த பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து முன்னேறினால் நமக்கானது நம்மிடம் வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காதல் என்பது மிகவும் பொதுவான உணர்ச்சி பிறக்கும் போதே அன்பின் வரையறை என்பது உருவாகிறது. நான் என் அப்பாவை நேசிக்கிறேன். நான் என் அம்மாவை நேசிக்கிறேன். நான் என் குழந்தைகளை நேசிக்கிறேன். அந்த வகையில் காதல் என்பது சில தனிமைகளுடன் நின்று விடக்கூடாது என நினைப்பதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் காதலுக்கு செகண்ட் சாய்ஸ் உண்டு. ஆமாம் நான் காதலிக்கிறேன் என சொல்ல விரும்புகிறேன் எனவும் ஐஸ்வர்யா கூறியுள்ளது தனுஷ், ரஜினி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனுஷின் காதலை ஏற்று மீண்டும் அவருக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக கேள்வி எழுந்துள்ளது.