கட்டணத்தை உயர்த்தி அதிக லாபம் பார்க்கும் ஏர்டெல்,வோடஃபோன், ஜியோ : கடுப்பில் வாடிக்கையாளர்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு வாடிக்கையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
இந்தியாவில் ஏர்டெல்,வோடஃபோன், ஜியோ ஆகிய 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சந்தையில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்த நிறுவனங்கள் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் உள்ளதால் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் என இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே கட்டணத்தை உயர்த்தினால் வாடிக்கையாளர்களை இழக்க கூடும் என்பதை உணர்ந்தும் வேறு வழி இல்லாமல் கட்டணத்தை உயர்த்தும் முடிவை வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ என அடுத்தடுத்து உயர்த்தியது.
இது வாடிக்கையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்தக் கட்டண உயர்வால் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனத்திற்கு மட்டும் வருடம் சுமார் 1 பில்லியன் டாலர் அதாவது ரூ.7500 கோடி அளவிலான பணவரவு உருவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.