சென்னையில் மோசமடைந்த காற்று மாசு...வெளியான அதிர்ச்சி தகவல்
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகை
தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் மக்கள் அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து, பூஜை செய்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து காணப்படும். அந்த வகையில் இந்தாண்டு கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின் போது காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று தரக்குறியீடு 200 புள்ளிகளை கடந்து மோசமான காற்று மாசுவாக காணப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த காற்று மாசு
அதிலும் மணலி கிராம பகுதியில் 250 புள்ளிகளையும், எண்ணுார் பகுதியில் 238 புள்ளிகளையும், இராயபுரத்தில் 232 புள்ளிகளையும் கடந்து காணப்படுகிறது.
அதே போல ஆலந்துாரில் 218 புள்ளிகளும், அரும்பாக்கத்தில் 212 புள்ளிகளும், வேளேச்சேரியில் 203 புள்ளிகளும், பெருங்குடியில் 190 புள்ளிகளும் காற்று மாசுவானது காணப்படுகிறது.
காற்று குறியீட்டை பொறுத்தவரை 50 புள்ளிகள் வரை நல்ல காற்று என்றும், 51 - 100 புள்ளிகள் வரை திருப்திகரமான காற்று என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதே போல 101 - 200 புள்ளிகள் வரை மிதமான காற்று மாசு என்றும், 200 - 300 புள்ளிகள் வரை மோசமான காற்று என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் 200 புள்ளிகளை தாண்டியுள்ளதால் மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் என்று தகவல் வெளியாகியுள்ளது.