டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க கூடாது என உத்தரவு

Delhi Schools Closed Air Pollution
By Thahir Nov 21, 2021 01:31 PM GMT
Report

டெல்லியில் கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின்போது, காற்று மாசு கட்டுப்பட்டு இருந்தது. ஆறுகளில் நீரும் தெளிவுடன் காணப்பட்டது.

கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல அதிகரிக்க தொடங்கியது.

கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அபாய கட்ட அளவில் இருப்பதால், டெல்லி மக்கள் திண்டாடி வருகின்றனர்.

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரமொன்றில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த தயார் என தெரிவித்தது.

இதேபோன்று டெல்லியின் என்.சி.ஆர். பகுதிகளை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தினால் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என ஆலோசனையும் வழங்கியது.

இதன்பின்னர் டெல்லியில் 15ந்தேதி முதல் ஒரு வார காலம் பள்ளிகள் மூடப்படும், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம், 17ந்தேதி வரை கட்டுமான பணிகள் தடை செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் பள்ளிகள் மூடியிருப்பதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், பள்ளிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டால் அனைத்து பள்ளிகளையும் அடுத்த உத்தரவு வரும்வரை தொடர்ந்து மூடும்படி கல்வி இயக்குனரகம் இன்று தெரிவித்து உள்ளது. எனினும், ஆன்லைன் வழி கல்வி தொடரும் என்றும் தெரிவித்து உள்ளது.