காற்று மாசு காரணமாக மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் - டெல்லி அரசு

Delhi Air Pollution School Close
By Thahir Nov 13, 2021 07:21 PM GMT
Report

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்திருப்பதால், வரும் வாரம் முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் தங்களுடைய இல்லங்களிலிருந்து ஆன்லைன் முறையில் வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல முக்கிய முடிவுகளை சனிக்கிழமை டெல்லி அரசு எடுத்துள்ளது.

காற்று மாசு குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் இரண்டு நாட்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பல்வேறு முடிவுகளை டெல்லி அரசு எடுத்துள்ளது. அதன்படி நவம்பர் 17ஆம் தேதிவரை கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்லாமல் தங்களுடைய இல்லங்களிலிருந்து "வொர்க் ஃப்ரம் ஹோம்" முறையில் பணிகளை தொடரலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகைக்கு முன்பிருந்தே காற்றின் தரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையையும் மீறி தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

மேலும், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதும் அதிகரித்துள்ளது.

இதனால் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்வதால் தற்போது தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க தகுதியானதாக இல்லை.

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் மேலும் குளிர்காலம் தொடங்கிவிட்டதால் காற்றின் வேகம் குறைவாக இருப்பதும் காற்று மாசு குறையாமல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாகிறது.

மூச்சுவிடுவதில் சிரமம், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் தொடர்பான புகார்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே சுவாச பிரச்னைகளை சந்தித்துவரும் நிலையில், காற்று மாசு காரணமாக இத்தகைய உடல்நலக் கோளாறுகள் இன்னும் அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தவிர டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகின்றன.

இந்நிலையில்தான் டெல்லி அரசு பல்வேறு முடிவுகளை இன்று அறிவித்து, காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ராட்சத இயந்திரங்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து காற்று மாசை கட்டுப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது.

விரைவிலேயே வாகனப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.