ஓவைசி கட்சியினர் கர்நாடகாவின் தாலிபான்கள் - பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை
ஓவைசி கட்சியினர் குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கல்புர்கி, ஹுபாலி தர்வாத் மற்றும் பெலாகவி மாநகராட்சி தேர்தல்கள் நீண்ட இழுபறிக்குப் பிறகு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தல் கர்நாடகாவின் புதிய முதல்வரான பசவராஜூக்கு மிக முக்கியமானது என்பதால் அங்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தேர்தல் நடைபெறும் பகுதி வடக்கு கர்நாடக பகுதி என்பதால் இங்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு பெரிய ஆதரவு கிடையாது. இதனால் காங்கிரஸூக்கும், பாஜகவுக்கு நேரடி மோதலாக இந்த தேர்தல் நடக்கவுள்ளது.
இதனிடையே கல்புர்கி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியிடம் கல்புர்கியில் ஓவைசி கட்சியின் செயல்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ஓவைசி கட்சி, கர்நாடகாவின் தாலிபான்கள் போன்றவர்கள். தாலிபான்கள், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சி, எஸ்.டி.பி.ஐ போன்றவர்களின் விஷயம் எல்லாமே ஒன்றுதான். அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓவைசி சி.டி.ரவி ஒரு குழந்தை, அவருக்கு சர்வதேச அரசியல் தெரியாது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தாலிபான்களுக்கு பாஜக தடை விதிப்பார்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.