எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை எப்போது? தமிழக அரசு விளக்கம்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்பான தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிரந்தர கட்டிடம் கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கவும், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நேயாளிகள் பிரிவை தொடங்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை எப்போது என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மதுரை எய்ம்ஸ் நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும். இந்த ஆண்டு எய்ம்ஸில் 50 மாணவர்களுக்கு சேர்க்கையை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை அளித்துள்ளோம்.எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அருகில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் தற்காலிகமாக அனுமதிக்கப்படுவர். மதுரை, தேனி, திண்டுக்கல் மருத்துவ கல்லூரிகளில் எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு இடம் தரப்படும். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழக அரசு தயாராக உள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் அது செயல்படுத்தப்படும்,'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு பாராட்டு தெரிவித்தனர். அத்துடன் எய்ம்ஸ் மாணவர்
சேர்க்கை தொடர்பாக தமிழக அரசின் திட்ட அறிக்கைக்கு ஒன்றிய அரசு பதில் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் தமிழக அரசின் அறிக்கை குறித்து எய்ம்ஸ் இயக்குனரும் பதில்
அளிக்க உத்தரவிட்டு வழக்கை 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.