ஸ்கிரிப்ட்டை மாத்துப்பா உதயநிதி.. செங்கலை அங்க காட்டவேண்டியதுதானே - சாடிய ஈபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலினின் செங்கல் பிரசாரத்தை குறிப்பிட்டு அறிவுரை வழங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
திருச்சியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகர் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கருப்பையா, கரூர் தங்கவேல், பெரம்பலூர் சந்திரமோகன் உள்ளிட்ட 40 வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``தமிழ்நாட்டில் 3 அணி போட்டி என்கின்றனர். மக்களுக்கு தெரியும். தேர்தலில் போட்டி என வந்ததுவிட்டால் அது அதிமுக மற்றும் திமுக-விற்கு இடையேதான். விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு.
சட்டம் ஒழுங்கு
இல்லையெனில், அதுபற்றி ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளை பெற, நிதியை பெற நாங்கள் பாடுபடுவோம். ஆனால், திமுக அப்படியல்ல.. குடும்பத்திற்காக பாடுபடும். திமுக ஆட்சியில் போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திமுக அமைச்சர்களின் ஊழல்களை சேகரித்து வைத்துள்ளேன்.
வரும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், அவர்கள் மீது நடவடிக்கை பாயும். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதிமுக அவர்களுக்கு துணை நிற்கும். இதை நான் ஓட்டுக்காக சொல்லவில்லை.
செங்கல் பிரச்சாரம்
எப்போது பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொள்கிறார். அதைத்தான் மூன்று வருடங்களாக காட்டிக்கொண்டிருக்கிறார். செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். ரோட்டில் காட்டி பிரயோஜனம் இல்லை. விளம்பரத்திற்காக செங்கல்லை காட்டுகிறார்.
ஸ்கிரிப்ட்டை மாத்துங்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திமுக எம்.பி-க்கள் என்ன செய்தார்கள்? 38 எம்.பிகள் 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 3 ஆண்டுகளாக செங்கல்லை காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை எடப்பாடி பழனிசாமி. முதல்கட்டமாக 30ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.