கண்கலங்கி கதறிய ஓபிஎஸ் : கைப்பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா!
முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.
உடல் நலக் குறைவால் இரண்டு வாரத்துக்கு முன்பு, சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், ஓபிஎஸ் மனைவி மறைந்த செய்தியறிந்து சசிகலா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதிமுக கொடி கட்டிய காரில் மருத்துவமனைக்கு சென்ற சசிகலா ஓபிஎஸ் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.
மனமுடைந்த ஓபிஎஸ் கண்கலங்கி நின்றார். பின்னர், நாற்காலியில் அமரவைத்து ஓபிஎஸ்ஸை தேற்றினார் சசிகலா. அப்போது மனைவியின் உடல்நிலை பற்றி சசிகலாவிடம் ஓபிஎஸ் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்கள், ஓபிஎஸ் மகன்கள் உடனிருந்தனர்.
இந்த நிலையில் விஜயலட்சுமியின் உடல் இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குக் கொண்டுவரப்பட்டு நாளை (செப். 02) அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு அரசியல் மோதல்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திடீரென சசிகலா இப்படி மருத்துவமனைக்கு வந்தது அங்கிருந்த அதிமுகவினர் இடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. கடைசியாக ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக மெரினாவில் தியானம் செய்வதற்கு முதல்நாள்தான் இருவரும் சந்திப்பு நடத்தினார்கள். அதன்பின் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. இந்த நிலையில் இன்று சசிகலா ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.