அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டுகளாக மாறுவார்கள் - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு தொடருமானால் அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமமுக நிர்வாகி மீது தாக்குதல்
மதுரை விமான நிலையத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டு வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார் அமமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர். இதையறிந்த அதிமுக தொண்டர்கள் சிலர் கோஷம் எழுப்பி நபரை தாக்கினர்.
இதனையடுத்து கோஷ எழுப்பிய நபர் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி செல்ஃபோனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி துாண்டுதலின் பேரில் அவரது முன்னாள் உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி புகார் அளித்தார் அமமுக நிர்வாகி.
இந்த புகாரை அடுத்து எடப்பாடி பழனிசாமி, அவரது உதவியாளர் கிருஷ்ணன் எம்எல்ஏ செந்தில்நாதன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித வெடிகுண்டாக மாறுவார்கள்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யபட்டதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக முறையில் நடைபெற்று வருகிறது.
ஸ்டாலினுடைய ஏவல் துறையாக காவல்துறை கண்ணியம் இழந்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் சர்வாதிகார போக்கு தொடருமானால் மதுரையில் அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அதிமுக தொண்டர்கள் ஜெயிலுக்கு போவதற்கு பயந்தவர்கள் இல்லை. பல ஜெயில்களை நாங்கள் பார்த்துள்ளோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் டிரையிலர் தான். திமுகவின் பூச்சாண்டிக்கு அதிமுக பயப்படாது என்றார்.