காலில் விழும் வீடியோ: எல்லை மீறும் தொண்டர்களின் சண்டை
அதிமுகவை தவெக தலைவர் விஜய் கடுமையான விமர்சனம் செய்த நிலையில், அதிமுக ஐடி விங் பக்கத்தில் விஜய்யை தாக்கி பதிவு வெளியானது, இதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அதிமுக - தவெக தொண்டர்கள் கட்சியை தாக்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நேற்று மாமல்லபுரத்தில் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியபோது, இதற்கு முன்னாள் ஆட்சி செய்தவர்களை போன்றும், தற்போது ஆட்சி செய்பவர்களை போன்று ஊழல் செய்ய மாட்டேன், ஊழல் சக்தி ஆட்சியில் அமரக்கூடாது என கூறினார்.
இதற்கு பதிலடியாக அதிமுக ஐடி விங் பக்கத்தில், பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று படம் வெளியீட்டிற்காக காத்திருந்த கதையை சொல்லவா? என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் தவெக தொண்டர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பிரதமர் மோடியின் காலில் விழுவது போன்ற வீடியோவை உருவாக்கி பரப்பினர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தவெக தலைவர் விஜய்யும் அவரது தந்தையும் பட வெளியீட்டுக்காக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி கால்களில் விழுவது போன்று வீடியோவை அதிமுக தொண்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
இரு கட்சி தொண்டர்களின் செயல்பாடுகள் எல்லைமீறி சென்று கொண்டிருப்பதாக பேசப்படுகிறது.