அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்; ஓ.பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்!
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
வழக்கு
கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை கொண்டுவருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொதுச் செயலர் தேர்தலுக்கு தடை விதிக்கவும், கட்சியிலிருந்து தங்களை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்தும்,
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனை எதிர்த்து 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30க்கு தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தது.
தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பு வழங்கினர். அதில் தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தள்ளுபடி செய்தது.