அதிமுக பொதுக்குழு வழக்கு: நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ் தரப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் ஒ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கேட்டது.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
நீதிபதி மாற்ற வேண்டும்
கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் மற்றும் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நீதிபதி சதீஷ்குமார், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அப்போது கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார்.
இந்த நிலையில்தான் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணயை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் செயல் நீதித் துறையை தரம் தாழ்த்துவதாக உள்ளது என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்த நிலையில் நீதிபதி மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்று விளக்கம் அளித்த பன்னீர்செல்வம் தரப்பு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே வாதிட விரும்புவதாக விருப்பம் தெரிவித்தது.
இதையடுத்து தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை திரும்ப பெற, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வலியுறுத்தினார். அந்த கடிதத்தை திரும்ப பெறுவது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சற்று நேரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.