ரோட்டில் செல்வோரெல்லாம் அதிமுக தலைவரா? - சசிகலாவை சரமாரியாக விமர்சித்த வளர்மதி

AIADMK V. K. Sasikala
By Petchi Avudaiappan Apr 25, 2022 03:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

எம்ஜிஆர் கை காட்டிய இடத்தில்தான் அதிமுக தற்போது உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார். 

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா அதிமுகவை தன்வசமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பலரும் அதனை மறுத்து பேசி வருகின்றனர். 

மறுபுறம் சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியமைப்போம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி வருகிறார். இதனிடையே  மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 11 மாத கால திமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறுத்திவிட்டு அதற்கு வேறு பெயர்களை சூட்டி தங்களது செல்வாக்கை நிரூபித்து வருகிறார்கள்.

ரோட்டில் செல்வோரெல்லாம் அதிமுக தலைவரா? - சசிகலாவை சரமாரியாக விமர்சித்த வளர்மதி | Aiadmk Leaders Valarmathi Attacking Sasikala

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக  இருந்த போது கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக ஆட்சியில் கொண்டு வந்ததை போல பேசி வருகின்றனர். சுய சிந்தனையோடு திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் என்பதற்கு ஒரு திட்டம் கூட இல்லை என்றும் அவர் கூறினார்.

அதிமுக கட்சியில் பொறுப்பு வாங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் என்ற போதிலும் அதில் தகுதியானவர்களை கட்சி தேர்ந்தெடுக்கும். அந்த வகையில் மதுரை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக வந்து தேர்தல் நடத்துவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று வளர்மதி கூறினார். பொதுமக்களை பாதிக்கின்ற எந்த ஒரு வி‌ஷயமாக இருந்தாலும் அதற்காக நிச்சயம் அதிமுக போராட்டம் நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய வளர்மதியிடம், சசிகலாவை ஜனநாயக முறைப்படி அதிமுகவின் பொதுச்செயலாளராக்குவோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிமுகவின் தலைமை யார் என்பது சமீபத்தில் நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு மூலம் தெரியவந்துள்ளது. ரோட்டில் செல்பவர்களை தலைமையாக ஏற்க முடியாது.எம்ஜிஆர் கை காட்டிய இடத்தில்தான் அதிமுக தற்போது உள்ளது.

அதிமுகவின் தலைமை ஒபிஎஸ், இபிஎஸ் மட்டும் தான். ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்களது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர் என வளர்மதி திட்டவட்டமாக கூறினார்.