அதிமுக தலைவர்களே உஷார்... உங்களை அழிக்க நினைக்கிறது - திருமாவளவன்
அதிமுக தொண்டர்களே..அதிமுக தலைவர்களே..உஷாராக இருங்கள்…எச்சரிக்கையாக இருங்கள் உங்களையும் அழிக்க பார்க்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கட்சிகளுக்கு திருமாவளவன் அழைப்பு
பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவை அடுத்து அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாள். தமிழகம் தழுவிய அளவில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை நடத்த அறிவித்துள்ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து அறப்போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
திமுகவில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சிகள் மற்றும் இதர ஜனநாயக சக்திகளும் மனித சங்கிலி பேராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு என்ற பெயரால் சமூக பதற்றத்தை ஏற்படுத்துவது சங்பரிவார்களின் வாடிக்கை. பிற இந்திய மாநிலங்களில் இது போன்ற சம்பவங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள் அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளனர்.
அதிமுக தொண்டர்களே உஷார்
இப்போது பெட்ரோல் குண்டு வீச்சு என்பது தமிழகத்தில் ஒரு கலாச்சாரமாக பரவி வருகிறது. இதற்கு பின்னணியிலும் சங்பரிவார்கள் தான் இருக்கிறார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் உறுதியாகச் சொல்கிறோம். ஆகவே அவர்களை அடையாளம் கண்டு கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஒரு வன்முறை கலமாக மாற்றுவதற்கு பயன்படுத்துகிறார்கள் அதற்கு அதிமுக மீது ஏறி சவாரி செய்கிறார்கள் அதிமுகவின் பலத்தை பயன்படுத்தி இங்கே காலுான்ற பார்கிறார்கள்.
அதிமுக தொண்டர்களே..அதிமுக தலைவர்களே..உஷாராக இருங்கள்... எச்சரிக்கையாக இருங்கள் உங்களையும் அழிக்க பார்க்கிறார்கள் உங்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தை சீர்குலைக்க பார்க்கிறார்கள்.
இது திமுகவிற்கு எதிரான நடவடிக்கை என்று எண்ணி விடக்கூடாது. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கை சங்பரிவார் வளர்வது அண்ணா,பெரியார் பாதுகாத்த சமூக நீதியை சீர் குலைப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்பதை அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் உணர வேண்டும்.