அண்ணாமலையின் பூச்சாண்டி எங்களிடம் பலிக்காது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அண்ணாமலையின் மறைமுக பூச்சாண்டி, மிரட்டல் எல்லாம் எங்களிடம் பலிக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக ஊழல் நிறைந்த கட்சி
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ திமுக ஊழல் செய்ததாகக் கூறப்படும் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடியை, 100 ரூபாயாக அடுக்கினால் நிலாவிற்குச் செல்லும் தொலைவில் மூன்றில் ஒரு பங்கு தூரம் சென்று வரலாம்.

திமுக ஊழல் பட்டியலில் உள்ள பணத்தை சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையினர் சோதனை செய்து பறிமுதல் செய்தால் அந்த பணத்தின் மூலம் நாட்டில் உள்ள பாதிக்கடனை அடைத்து விடலாம்.
திமுக ஊழல் நிறைந்த கட்சி என்பது உலகத்துக்கே தெரியும் ஊழல் செய்ததற்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான்.
அதிமுக பெயரை அண்ணாமலை குறிப்பிடவில்லை அப்படி மட்டும் அவர் குறிப்பிடட்டும் அதன்பின் எங்கள் ரியாக்சனை நீங்கள் பார்ப்பீர்கள்.
எங்களுக்கு மடியில் கனம் இல்லை. எனவே, வழியில் பயம் இல்லை. சிபிஐ குறித்த பயம் இல்லை, வருமான வரித்துறை குறித்த பயம் இல்லை.
அண்ணாமலையின் பூச்சாண்டிக்கு அதிமுக பயப்படாது
அதிமுக பெயரைக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசினால் அது குறித்து நான் பேசுகிறேன். எந்த பட்டியலை வெளியிட்டாலும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.
யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை . எந்த பூச்சாண்டிக்கும் அதிமுக பயப்படாது. எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி நாங்கள் தான்.
எத்தனை இடங்கள் கொடுப்பது என்பது குறித்து முடிவெடுப்போம். எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அதில் நாங்கள் என்றைக்குமே உறுதியாக உள்ளோம்’’ என்றார்.