அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு - மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு வரும்வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனோஜ் பாண்டியன் அவசர முறையீடு
அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபட்ட நிலையில், நேற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் அவசர முறையீடு செய்திருந்தார்.
இந்த முறையீட்டை அவசர வழக்காக மனுதாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்
முன்னதாக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர்.
பொதுச்செயலாளர் தேர்தலை தள்ளி வைப்பதால் எதுவும் நடந்து விடாது என்றும் தேர்தலுக்கு தடை விதிக்காவிட்டால் தீர்மானத்திற்கு எதிரான பழைய வழக்கு செல்லாததாகிவிடும் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.
30 நிமிடங்களுக்கு மேலாக ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முவைத்த நிலையில் தற்பொழுது இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றம் தலையிட முடியாது
அதிமுக உறுப்பினர்களின் மூலம் நடத்தப்படும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு ஓ.பி.எஸ்.க்கு 1% கூட ஆதரவு இல்லை என வாதம் தொடங்கியது.
மேலும் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும் ஆனால் முடிவை அறிவிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஏப்ரல் 11க்கு ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை முன்கூட்டியே மார்ச் 22ம் தேதி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக நீதிபதி கூறினார்.
இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு தடை கோரிய வழக்கிற்கு மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.