பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்; ஓபிஎஸ் அதிரடி - ஈபிஎஸ் அதிர்ச்சி
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளர் தேர்தல்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில்
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேர் சார்பிலும் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முதலில் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தது.
ஓபிஎஸ் அதிரடி
அதில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளையும் வகித்துள்ளார். கட்சிக்கு மிக நெருக்கடி நேர்ந்த சமயங்களில் கட்சிக்காகப் பணியாற்றியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது எனவும், எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த விளக்கமும் கேட்காமல் காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது, நியாயமற்றது என வாதிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப்பெறத் தயார். பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடத் தயார் என்றும், தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் என வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.