அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு விவகாரம் - டிடிவி தினகரன் விலகல் - சசிகலாவின் முடிவு என்னவாக இருக்கும்?
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தான் கைவிடுவதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டி.டி.வி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மரணமடைந்தார்.
அதனையடுத்து, பொதுச் செயலாளராக வி.கே சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நான்காண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். பின்னர் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த சமயத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடந்தது.
அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்கள். அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டார்கள்.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்கள்.
இந்த வழக்கு கட்டணமாக ரூ.25 லட்சம் செலுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, வங்கிகளின் மேலாளர்கள் வங்கி கணக்குகளை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினருக்கு வழங்கினர்.
இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்கள். நீதிமன்ற கட்டணமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தும் வழக்குகளை மட்டுமே உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு விசாரனைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே தேர்தல் ஆணையம் இந்த மனுவை நிராகரித்ததாகவும் அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது அமமுக என்ற கட்சியை டி.டி.வி தினகரன் தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதா அல்லது மனுவை திரும்ப பெறுவதா என்பது தொடர்பாக சசிகலாவிடம் தகவல் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ஏப்ரல் 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.