கோட்டையிலே நம்ம கோடி பறக்கணும்”- ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு

announcement ops eps aiadmk
By Irumporai Jan 15, 2022 07:03 AM GMT
Report

வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105 வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில்,பொன்மனச் செம்மல்,புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாள் தமிழ்ச் சமூக வரலாற்றின் பொன்னாள் என்றும்,அவரின் பிறந்த நாளில் தமிழகம் காக்க,தன்னல ஆட்சியை அகற்றுவோம்,கோட்டையிலே நமது கொடி பறந்திட உறுதிமொழி ஏற்போம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக,அவர்கள் தங்களது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 105-ஆவது பிறந்த நாள் புகழோவிய மடல் வழியாக நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்கிறோம். “

வாழ்க்கை என்றொரு பயணத்திலே,பலர் வருவார்,போவார் பூமியிலே,வானத்து நிலவாய் சிலர் இருப்பார் .

அந்த வரிசையில் – முதல்வர் நம் உள்ளமெல்லாம் நிறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு தனி மனிதராக,பணியாற்றிய கலைத் துறையின் நாயகராக,ஓர் இயக்கத்தின் தலைவராக,மக்களின் பேராதரவைப் பெற்ற முதல்வராக, “செல்லும் இடமெல்லாம் சீர்பெருக்கி,பேர் நிறுத்தி,கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும் பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே வள்ளலே!எங்கள் வாழ்வே!” என்று ஆயிரம் தலைமுறை தமிழர்கள் கொண்டாடி மகிழத் தக்க மன்னாதி மன்னன்,

“தோட்டம் காக்க போட்டவேலி பயிரைத் தின்பதோ ?;அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ?;நான் ஒரு கை பார்க்கிறேன்;நேரம் வரும் கேட்கிறேன்;பூனை அல்ல, புலிதான் என்று போகப் போகக் காட்டுகிறேன்”என்று,எடுத்த சபதம் முடித்து நம் உயிரினும் மேலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து,வளர்த்து,ஆட்சியையும்,அதிகாரத்தையும் சாமான்ய மக்களின் கைகளுக்குக் கொண்டுசென்ற ஏழைகளின் தோழன்,

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்தமண்ணிலே” என்று கருணை தீபமாய் ஒளிரும் ஆட்சி முறையை தமிழ் நாட்டுக்கு வழங்கியவர் நம் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டம்;தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்;திராவிட இயக்கம் காணத் துடித்த சாதிப் பெயர்கள் நீக்கம்; கிராமப் புறங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட நிலவி வந்த அடக்குமுறை பிரபுத்துவ நிர்வாக அமைப்பை ஒழித்தது;பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி ஒதுக்கீடு என்று எல்லா வகையிலும் போற்றத்தக்கவையும்,எந்நாளும் நிலைத்திருக்கக் கூடியவையுமான பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஒருசில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க. அரசின் திறமையற்ற,ஊழல் மிகுந்த,மக்களை வஞ்சிக்கின்ற,சுயநலம் மிக்க ஒரு குடும்ப ஆட்சியின் அலங்கோலங்களை தமிழ் நாட்டில் அடியோடு வேரறுக்க நாம் அனைவரும் போர்பரணி பாடவேண்டிய நேரம் இது.

பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்,இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் நடத்தியது போன்ற பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்டிட நாம் சூளுரைக்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் என்பதே கழக உடன்பிறப்புகளோடு இந்நாளில் நாங்கள் கூறும் செய்தியும்,வேண்டுகோளும். தமிழகம் காக்க,தன்னல ஆட்சியை அகற்றுவோம்!கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்; கொள்கை வீர தீபங்களை ஏற்றிடுவோம்”,என்று தெரிவித்துள்ளனர்.