ஆளுநரின் உயிருக்கு ஆபத்து ,திமுக மீது நடவடிக்கை : பிரதமருக்கு அதிமுக கடிதம்
தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் தெரிவித்துள்ளதுடன், திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சமீபத்தில் மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அப்போது அவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் ,கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இதில் ஆளுநரின் கான்வாய் மீது கொடிகளும் , கொடிக்கம்புகளும் வீசப்பட்டதாக அதிமுக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முதல்வர் மு.க .ஸ்டாலின், ஆளுநருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும், இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் பழக்கம், பெண்கள், சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆகியவற்றின் திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான முருகவேல் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் .
இந்த புகார் மனு குடியரசுத் தலைவர் ,பிரதமர் ,மத்திய உள்துறை அமைச்சகம் ,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மின்னஞ்சல் மற்றும் தபால் ஆகியவற்றின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. மயிலாடுதுறையில் ஆளுநரின் சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என திறம்பட செயலாற்றாத திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.