பணப்பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகி - கையும் களவுமாக பிடித்த போலீசார்!
சட்டமன்றத் தேர்தல் நாளை தமிழகத்தில் நடைபெற உள்ளது. ஒரு மாத காலமாக தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய அனைத்து கட்சிகளும் நேற்றோடு தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தன. இதனையடுத்து, நாளை நடைபெறும் தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும் பணியில் தீவிரமாக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது பறக்கும் படையினரிடம் அரசியல் பிரமுகர் ஒருவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பறக்கும் படை அவர்கள் மீது நடவடிக்கை தற்போது எடுத்து வருகிறது. பணப்பட்டுவாடா தொடர்பாக திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சியினர் இதுவரை மாட்டிக்கொண்டுள்ளனர். இ
தனையடுத்து, கன்னங்குறிச்சி பேரூராட்சியின் அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் பணப்பட்டுவாடா விவகாரத்தில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் வீடு வீடாக பணம் விநியோகம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் அவலிடம் வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, சோதனை நடத்தியதில் அவரிடமிருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் என்பதை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் உறுதி செய்தார்கள். இந்நிலையில், மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.