இதுவரை நடந்த தேர்தலில் சரிசமமாக வெற்றிகண்ட அதிமுக - திமுக

politics tamilnadu dmk aiadmk won
By Jon Mar 14, 2021 07:23 PM GMT
Report

இதுவரை நடந்த தேர்தலில் கிட்டத்தட்ட பெரிய வித்தியாசம் இன்றி வெற்றிபெற்ற அதிமுக - திமுக ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிக வித்தியாசமின்றி, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், மொத்த இடங்களை பங்கிட்டுள்ளன. ஆளும் கட்சி தான், உள்ளாட்சி தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நிலை, இந்த தேர்தலில் மாறியுள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.க., கூட்டணி, ஆளும் கூட்டணியை விட, சற்று கூடுதல் வெற்றியை பெற்றுள்ளது.

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு துவங்கியது; நேற்று இரவு வரை தொடர்ந்தது. மாறி மாறி முன்னிலை ஆரம்பத்திலிருந்தே, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்றன. நேற்று மாலை நிலவரப்படி, தேர்தல் நடந்த, 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க., கூட்டணி, 240 இடங்களை கைப்பற்றியது.

தி.மு.க., கூட்டணி, 271 இடங்களை பிடித்து முன்னேறியது. ஊராட்சி ஒன்றியங்களில், தேர்தல் நடந்த, 5,090 வார்டுகளில், அ.தி.மு.க., கூட்டணி, 2,199 இடங்களையும், தி.மு.க., கூட்டணி, 2,356 இடங்களையும் பிடித்தன.

மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், 512 வார்டுகளை கைப்பற்றினர். தேர்தல் நடந்த, 27 மாவட்டங்களில், அ.தி.மு.க., கூட்டணி, கோவை, சேலம், தர்மபுரி, கடலுார், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், துாத்துக்குடி, அரியலுார், விருதுநகர் என, 13 மாவட்டங்களில், அதிகளவில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி களை பிடித்துள்ளது.இம்மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகள், அ.தி.மு.க.,விற்கு உறுதியாகி உள்ளன. அதேபோல, தி.மு.க., கூட்டணி, மதுரை, நீலகிரி,திண்டுக்கல், பெரம்பலுார், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி என, 13 மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளை, அதிகம் பிடித்துள்ளது.

இம்மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகள், தி.மு.க.,கூட்டணிக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், இரு கூட்டணிக்கும் இடையில், இரவு வரை இழுபறி நீடித்தது. பொதுவாக உள்ளாட்சி தேர்தல், ஆளும் கட்சிக்குசாதகமாக இருக்கும். அக்கட்சியே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும். ஆனால், இம்முறை ஆளும் கட்சியான, அ.தி.மு.க., கூட்டணியை விட, சற்று கூடுதலான இடங்களை, தி.மு.க., கூட்டணி பிடித்துள்ளது.

அதேநேரம், இரு கட்சிகளும், தனிப்பெரும் வெற்றியை பெற தவறி விட்டதை, இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த தேர்தல்களுடன் ஒப்பீடு தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல்களில், ஆளும் கட்சி, அதிக இடங்களை கைப்பற்றுவது வழக்கம். மாநிலத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவரே, உள்ளாட்சியிலும் இருந்தால், திட்டப் பணிகளில் சிக்கல் வராது என்ற எண்ணமும், ஆளுங்கட்சியின் அதிகார பலமும், இதற்குகாரணமாக இருந்தன. கடந்த, 2006 தேர்தலில், தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தது.

அப்போது, தேர்தல் நடந்த, 6,569 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், தி.மு.க., 2,488 இடங்களையும், அ.தி.மு.க., 1,417 இடங்களையும் கைப்பற்றின. மற்ற இடங்களில், இவற்றின் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. அதேபோல, 656 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில், தி.மு.க., 312 இடங்களையும், அ.தி.மு.க., 157 இடங்களையும் கைப்பற்றின.

அடுத்து, 2011ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தது. அந்த தேர்தலில், 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், அ.தி.மு.க., 3,893 இடங்களிலும், தி.மு.க., 1,007 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தம், 655 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க., 602 இடங்களிலும், தி.மு.க., 30 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிற கட்சிகள், மற்ற இடங்களில் வென்றன. இம்முறை, 27 மாவட்டங்களில், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 2,295 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் இடங்களில், தி.மு.க.,வும், 2,103 இடங்களில், அ.தி.மு.க.,வும் முன்னிலையில் உள்ளன.

தி.மு.க.,விற்கு, 2006 முடிவுகளுடன் ஒப்பிட்டால், தற்போது பெற்றுள்ள இடங்கள் குறைவு தான். அதேபோல்,, அ.தி.மு.க., 2011ல் பெற்ற இடங்களுடன் ஒப்பிட்டால், தற்போது, 60 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த தேர்தல் முடிவுகளில் காணப்பட்ட ஆளுங்கட்சி ஆதிக்கம், தற்போது இல்லை.