திமுக vs அதிமுக: 54 ஆண்டுகால தமிழக அரசியலை இயக்கும் இரு துருவங்கள்
தமிழக அரசியல் என்பது கடந்த 53 ஆண்டுகளாக திமுக - அதிமுக என்கிற இரு திராவிட கட்சிகளுக்கு இடையே தான் நிலவி வருகின்றன. மூன்றாவது அணி, தேசிய கட்சிகள் என அனைத்து மாற்று ஏற்பாடுகளும் தோல்வியே அடைந்துள்ளன. திமுக - அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இதனை காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளும் உணர்ந்தே உள்ளன. இதனால் தான் குறைவான இடங்கள் கிடைத்தாலும் கூட இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருகின்றன. காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது திமுக. அதன் பின்னர் 1972ல் திமுகவில் முதல் பிளவு ஏற்பட்டது. எம்ஜிஆர் தனியாக பிரிந்து அதிமுகவை தொடங்கினார்.
எமர்ஜென்சி காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் 1977ல் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார் எம்ஜிஆர். அதன் பின்னர் 12 ஆண்டுகள் கருணாநிதிக்கும் திமுகவிற்கும் அரசியல் வனவாசம் தான். அதன்பின்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வென்று அதிமுக ஆட்சியை பிடித்தது. 1984 தேர்தலில் தான் மருத்துவமனையில் இருந்து கொண்டே வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர்.
அதன் பின்னர் 1987 எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி அணி - ஜெயலலிதா அணி என இரண்டாக பிரித்தது. 1989ல் நடைபெற்ற தேர்தலில் திமுக வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அதிமுக ஜெயலலிதா வசம் சென்றது. ஆனால் 1991ல் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என கலைஞர் ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது.
ஆனால் இது ராஜிவ் காந்தி - ஜெயலலிதா - சுப்ரமணிய சாமி செய்த சதி எனக் கூறப்பட்டு வந்தது. பின்னர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டவே அதனால் ஏற்பட்ட அனுதாப அலையில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி பெருவெற்றி பெற்றது. இரண்டு இடங்களில் மட்டுமே திமுக வென்றது. தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார் கருணாநிதி.
ஆனால் ஐந்தே ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. 1996ல் நடைபெற்ற தேர்தலில் திமுக 173 இடங்களில் வென்றது. அதிமுக படுதோல்வியை சந்தித்தது. ஜெயலலிதா கூட தோற்றுப் போனார். ஜெயலலிதா ஆட்சியில் நிலவிய ஊழல் குற்றச்சாட்டுகளே படுதோல்விக்கு காரணமாக அமைந்தது. ரஜினியும் இதே தேர்தலில் தான் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என கூறியிருந்தார்.
அதன் பின்னர் 2001ல் மீண்டும் அதிமுகவும், 2006ல் மீண்டும் திமுகவும் வென்று மாறி மாறி ஆட்சி அமைத்தன. 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் 2016 சட்டமன்ற தேர்தலிலும் தான் தனித்தே போட்டியிட்டு அதிமுக வென்று காட்டியது. திமுக இதுநாள் வரை தனித்து எந்த தேர்தலிலும் போட்டியிட்டு வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2016ல் மாற்று அணி என களம் கண்ட மக்கள் நலக் கூட்டணி, பாஜக படுதோல்வியை சந்தித்தன. திமுக - அதிமுக கூட்டணியை அனைத்து இடங்களிலும் வென்றது.
தற்போது 2021 தேர்தலிலும் பல அணிகள் இருந்தாலும் பிரதான போட்டி என்பது திமுக - அதிமுகவிற்கு இடையே தான் உள்ளது. திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே அடிப்படை வேறுபாடுகள் இருந்தாலும் இரண்டு கட்சிகளுமே தங்களை திராவிட பாரம்பரியத்தின் வழி வந்தவர்கள் என்றே சொல்லிக் கொள்கின்றனர்.
மக்கள் நல திட்டங்களில் இரண்டு கட்சிகளுக்கும் ஆரோக்கியமாக போட்டி போட்டுக்கொண்டு செயல்படுத்தின.
கருணாநிதி - ஜெயலலிதா என்கிற இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. தமிழக அரசியல் இனியும் திராவிட கட்சிகளுக்கு இடையே இரு துருவ அரசியலாக இருக்குமா இல்லை மாற்று அணி உருவாகுமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்