"இதனை செய்யமாட்டோம் என அதிமுக,திமுக கட்சிகளால் தங்கள் தலைவர்கள் நினைவிடத்தில் சத்தியம் செய்ய முடியுமா?" - சீமான் கேள்வி
''ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து, ஐந்து ஆண்டுகளில் செய்து விடுவாரா,'' என, சீமான் கேள்வி எழுப்பினார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் வேட்பாளர் மகாலட்சுமி,சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி வேட்பாளர் ஜெயசிம்மராஜாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் சீமான் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது மயிலாப்பூரில் அவர் பேசியதாவது, கடந்த, 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் லஞ்சம், ஊழல் நடப்பது மக்களுக்கு நன்றாக தெரியும். மேலும் மக்களையும் ஓட்டுக்கு பணம் கொடுத்து, அவர்களை அடிமையாக்கி விட்டனர். ஆற்று மணல் கொள்ளை,கனிமவள திருட்டு மற்றும் மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய குடிநீர், கல்வி, மருத்துவத்தை வியாபாரமாக்கி விட்டனர்.
அரசே, குடிநீரை, 10 ரூபாய்க்கு விற்கும் நிலைக்கு வந்து விட்டது. மேலும் அதிமுக,திமுக கட்சிகளால்அவர்களது தலைவர்களின் நினைவிடத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என சத்தியம் செய்ய முடியுமா?. தேர்தலில் தி.மு.க., வெல்வது என்பது ஒரு நிகழ்வுதான். அதுமட்டுமின்றி,50 ஆண்டுகளில் செய்ய முடியாததை, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து, ஐந்து ஆண்டுகளில் செய்து விடுவாரா, நிச்சயம் முடியாது. இவ்வாறு சீமான் பேசினார்.