அதிமுக எம்.எல்.ஏ காரில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் - கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது
திருச்சி பெட்டவாய்த்தலை அருகே வாகன சோதனையில் 1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முசிறி அதிமுக எம்எல்ஏ வும், வேட்பாளருமான செல்வராசுக்கு பணத்தைக் கொண்டு சென்றதாக மாவட்ட கவுன்சிலர், எம்.எல்.ஏ. கார் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி - கரூர் சாலை பெட்டவாய்த்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த வெள்ளை நிற இனோவா காரை போலீசார் நிறுத்தினர்.
அப்போது காரை சோதனை நடத்த முயன்றபோது, காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சாக்குமூட்டையை வெளியில் எடுக்க முயன்றனர். வெளியில் எடுத்து பார்க்கும் போது சாக்குமூட்டையில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் பயணித்த நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கார் திருச்சி முசிறி தொகுதி தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ. செல்வராசு மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என்றும், தொட்டியம் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்திய ராஜா, எம்.எல்.ஏ. செல்வராசு ஓட்டுநர் ஜெயசீலன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நான்கு பேர் பயணித்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து பணத்துடன் காரை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணாவிற்கு தகவல் கொடுத்தனர். பிறகு, வருமான வரித்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் ரொக்கம் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர், அலுவலர்கள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டதில் ஒரு கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட கருவூலத்திற்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நான்கு பேரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.