விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுள்ள அதிமுக: எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த 25ஆம் தேதி முதல் தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் அனைத்துக் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அனைத்து கட்சிக் கொடிகளும் அகற்றப்பட்டு, அரசியல் தலைவர்களின் சிலைகள் அனைத்தும் துணிகளால் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை சுவர் விளம்பரத்திற்கு அனுமதி தராத நிலையில் தேர்தல் நடைமுறை விதிகளை மீறி அதிமுகவினர் அனைத்து ஊராட்சிகளிலும் சுவர் விளம்பரம் செய்து தேர்தல் நடைமுறை விதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இந்த சம்பவம் எதிர்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான வெங்கடேசனிடம் எதிர்கட்சிகள் கேள்வி கேட்ட போது, இதுவரை சுவர் விளம்பரத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறினாரே தவிர, நடவடிக்கை எடுப்பதாக கூறவில்லை.
இவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? அல்லது அதிமுகவுக்கு சாதகமாக தேர்தல் அலுவலர்செயல்படுகிறாரா? என்று மற்ற கட்சிகளான திமுக, காங்கிரஸ், அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.