அதிமுக - பாஜக வலிமையான கூட்டணி அமைத்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக- பாஜக வலிமையான கூட்டணியை அமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மதுரை பாண்டிக்கோவில் அருகே நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலகமே வியக்கும் வகையில் ஒரே ஆண்டில் தடுப்பூசியை வழங்கிய பெருமை பிரதமர் மோடியையே சேரும் என்றார்.
மத்திய அரசு மக்களுக்கான அரசாக செயல்படுகிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், தேவையான நிதியையும் தருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கி, மின்மிகை மாநிலமாகவும் தமிழகம் திகழ்வதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கான அரசுகள் செயல்படுவதால் மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்கின்றன என தெரிவித்திருந்தார். முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒரே ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தவர் மோடி எனக் குறிப்பிட்டார்.