அதிமுகவில் பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆளும் அதிமுக கூட்டணியில் பாமக-வுடன் ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், பாஜக மற்றும் தேமுதிக-வுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில் பாஜகவுடன் நடந்து வந்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. தரப்பில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் பா.ஜ.க. சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அறிக்கை வெளியானது.
அதில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.