5 வருஷம் தான்.. மனித குலமே அழியும் - புதிய ரூபம் எடுக்கும் AI
5 ஆண்டுகளில் ஏஐ என்பது மனிதர்களுக்கு இணையாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம்
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகளவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வேலைகளில் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதன்படி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் குறைந்த ஊதிய வேலைகளில் செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை உருவாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 41 சதவீத நிறுவனங்கள் AI கருவிகளைப் பயன்படுத்துவதற்காக தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
2033ஆம் ஆண்டுக்குள் AI தொழில் துறையின் சந்தை மதிப்பு நான்கு புள்ளி எட்டு டிரில்லியன் டாலர்களை எட்டும். AI தொழில்நுட்பம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைவரும் பயனடைவதை உறுதி செய்யவேண்டும் என ஐநா குறிப்பிட்டுள்ளது.
மனித குலத்திற்கு ஆபத்து
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு என்பது இன்னும் 5 ஆண்டுகளில், அதாவது 2030ல் மனிதருக்கு இணையான அறிவை பெற்றதாக உருவெடுக்கும். இது மனிதகுலத்தை நிரந்தரமாக அழிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், கூகிள் டீப் மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் இது குறித்து கூறுகையில்,
"ஏஜிஐ என்பது மனிதர்களை விட புத்திசாலியாக மாறும் ஆபத்து இருக்கிறது. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் இது நடக்கும் ஆபத்து அதிகமாகவே உள்ளது. உலக நாடுகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட எப்படி ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறதோ..
அதேபோல ஏஐ நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஒரு அமைப்பு தேவை. இதன் மூலம் ஏஐ சார்ந்த ஆய்வுகளை முடிந்தவரை பாதுகாப்பாக மாற்ற முடியும். பாதுகாப்பற்ற திட்டங்களைக் கண்காணிக்கவும், அவற்றைக் கையாளவும் இந்த அமைப்பு தேவை எனத் தெரிவித்துள்ளார்.