அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நல் வாழ்வு இல்லை - மந்திரிகளுக்கு மட்டுமே நல்வாழ்வு
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நல்வாழ்வு அமையவில்லை, மந்திரிகளுக்கு மட்டுமே நல்வாழ்வு அமைந்தது என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான இன்று ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இந்நிலையில் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ள வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ஆலங்காயம் திமுக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசின் 4 மாத சாதனைகள் இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிகமான வாக்குகள் மற்றும் மக்களின் ஆதரவுகளை அளிக்கும் என்றும், இந்த உள்ளாட்சி தேர்தலில் 100 க்கு 100 சதவீதம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் எனவும் கூறினார்.
மேலும், அதிமுகவினர் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாகிவிட்டார்கள் என்றும், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நல்வாழ்வு அமையவில்லை, மந்திரிகளுக்கு மட்டுமே நல்வாழ்வு அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.