வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் - அண்ணாமலை

DMK BJP Law Agriculture MK Stalin
By Thahir Aug 28, 2021 06:52 AM GMT
Report

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்கள், தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப் பாதுகாப்பை அழிப்பது என்று கூறி விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சட்டத்துக்கு திமுக ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் - அண்ணாமலை | Agriculture Law Dmk Mk Stalin Bjp Annamalai

அதன்படி இன்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார். இதற்கு பாமக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜகவும் அதிமுகவும் வெளிநடப்பு செய்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராகத் திமுக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் எவரும் இந்தச் சட்டங்களை எதிர்க்காதபோது, உண்மையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கும்போது, ​​தமிழக மக்களுக்கு இது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்று தெரியும்'' என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.